இலங்கை நிழல் உலக தாதாவான சர்வதேச குற்றவாளி அங்கொட லொக்காவின் உடல் முறை கேடாக எரிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் நிழல் உலக தாதாவும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில், தொடர்புடையவரான, அங்கொட லொக்கா, தமிழகத்தில் பதுங்கி இருந்த நிலையில், கடந்த மாதம் நான்காம் தேதி கோவை சேரன் மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது குடியுரிமையை மறைத்து, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப் சிங் என்ற பெயரில், மதுரை கூடல் நகர் அருகே ரயில்லாளர் நகரில் வசிப்பதாக போலி ஆவணங்களைத் தயாரித்து. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லொக்காவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கோவை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், போலி ஆவணம் தயாரித்ததாக, மதுரையைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி, ஈரோட்டைச் சேர்ந்த தயாஈஸ்வர் மற்றும் அங்கொட இருந்த அம்மணி தான்ஷினி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிசிஐடி ஐடி சங்கர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கொட உடல் உண்மையில் எரிக்கப்பட்டதா? அவர் உயிருடன் உள்ளாரா என்பது குறித்து சிபிசிஐடி விசாரணை முடிவில் தெரியவரும்.