இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்கமுடியாத ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிறது. எனினும் ராஜினாமா செய்ய வலியுறுத்தும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவரும் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ஆட்சியில் நீடித்து வருகின்றனர். அதே சமயம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளிடமிருந்து கடன்பெறும் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றனர். மேலும் தங்களுக்கு எதிரான அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அந்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த இடைக் கால அரசு அமைப்பதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டமிட்டு இருக்கிறார். இது குறித்து அனைத்துக் கட்சிகளுக்கும், சுயேச்சை எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், அனைத்துக்கட்சி அரசு அமைக்க தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உடைய கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு இப்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண அனைத்துக்கட்சி அரசுக்கு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்துக் கட்சி அரசின் வடிவம் தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான மந்திரிசபை விவாதித்து முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள கோத்தபய ராஜபக்சே 29ஆம் தேதி (இன்று) நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவிவிலகி இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சூழ்நிலையில், நாட்டில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். அதே சமயம் தான் பதவிவிலக மாட்டேன் என்றும் எவ்வித இடைக்கால அரசும் தன் தலைமையில்தான் அமையவேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.