இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் அதிகரித்துவிட்டது. இதனால் இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நாடுகள் கடன் உதவி மற்றும் பல்வேறு விதமான உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவும் பல்வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறது. அதன்படி 5.75 மில்லியன் டாலர் நிவாரண பொருட்கள், கால்நடை பண்ணைக்கு 27 மில்லியன் டாலர், சிறு மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கு 120 மில்லியன் டாலர் உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது.
இதேப்போன்று வறுமையில் வாடும் பின்தங்கிய மக்களுக்காக 6 மில்லியன் டாலர் உதவி செய்வதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து உயர்மட்டக்குழு இலங்கைக்கு வருகை புரிந்துள்ளது. இவர்கள் இலங்கையில் உள்ள பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை செய்து இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எப்படி தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இவர்கள் வருகிற 29-ஆம் தேதி வரை இலங்கையிலேயே தங்கி இருந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் முக்கிய நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். மேலும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.