இலங்கை நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, ராஜபக்சே சகோதரர்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற 19 ஆம் தேதி கொழும்புவிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள ரம்புக்கானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மூத்த போலீஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் கேகாலை நகர நீதிமன்றத்தில், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் அவர் துப்பாக்கி குண்டு காயங்களால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பின் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்ட போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.