தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 200 வார்டுகளில் 5974 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 1500-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் 15 மண்டல பார்வையாளர்கள், 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 90 பறக்கும் படை அதிகாரிகள் உள்பட 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தலை முன்னிட்டு நேரடி மற்றும் அவசர பயன்பாட்டிற்காக 12,000 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியானது துவங்க உள்ளது.
மேலும் மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் நடத்த தேவையான மை, அரக்கு உள்ளிட்ட பொருட்களுடன், கொரோனா தொற்று கட்டுப்பாட்டு வழிமுறைகளான மருத்துவ உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் போன்ற சாதனங்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. இதனையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி வகுப்பு சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 15 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு வருகிற 21-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற உள்ளது.