ஆர்.பி உதயகுமார் ஓ. பன்னீர் செல்வத்தை கடுமையாக சாடியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் சுயநலம் பிடித்த நபர்களிடமிருந்து அதிமுக கட்சியை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமிதான். இதன் காரணமாகத்தான் 90% நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கின்றனர். ஆனால் ஓபிஎஸ் தொண்டர்கள் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் போக்குவரத்து நெரிசல் என்று குழந்தைத்தனமான பதிலை ஓபிஎஸ் கூறுகிறார். இதனால் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு உண்டான தகுதியை ஓபிஎஸ் இழந்து விட்டார்.
அதிமுக உங்க அப்பா வீட்டு சொத்தா என ஓபிஎஸ் கேட்டார். அப்படி கேட்டவர் எதற்காக சொந்த வீட்டிலேயே திருடினார். ஓபிஎஸ் தனியாக இருப்பதால்தான் புலம்பிக்கொண்டே இருக்கிறார். தலைமை மேல் ஆசை இல்லை என்று சொல்வதெல்லாம் அரசியல் நாடகம். இந்த நாடகத்தை தொண்டர்கள் நம்ப மாட்டார்கள். அவருடைய இறுதி அத்தியாயத்தின் திருவிளையாடல் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாமானிய தொண்டனாக இருந்து எம்எல்ஏ என்ற அந்தஸ்தை பெற்றவர்தான் உசிலம்பட்டி ஐயப்பன். சிலர் திருவிழாவின்போது மிட்டாயை காட்டி குழந்தைகளை ஏமாற்றி அழைத்துச் சென்று விடுவார்கள். அது போன்று தான் தற்போது உசிலம்பட்டி ஐயப்பன் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கிறார் என்றார்.