நொய்டாவை சேர்ந்த 6 வயது சிறுமி உயிரிழந்து 5 பேருக்கு வாழ்வளித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவை சேர்ந்த ஹரி நாராயணன்-பூனம் என்ற தம்பதிகளின் 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்தது. இதைக்கண்ட அவரது பெற்றோர்கள் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் மூளையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியின் உடலை உறுப்பு தானம் செய்தால் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்று உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து அந்த சிறுமியின் பெற்றோருக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.
பின்னர் அவர்களின் சம்மதத்துடன் அந்த சிறுமியின் கல்லீரல், சிறுநீரகம், இதயம்,கண் ஆகியவற்றை 5 பேருக்கு பொருத்தி அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளதாவது: “மருத்துவர்கள் உறுப்பு தானம் குறித்து எங்களிடம் தெரிவித்தார்கள். எங்கள் குழந்தையால் மற்ற உயிர்களை காப்பாற்ற முடியும் என்றதால் அதை பற்றி யோசித்து சரி என்று கூறினோம். மற்றவரின் வாழ்க்கையில் அவள் உயிருடன் இருப்பாள் என்றும், மற்றவர்களின் புன்னகைக்கு ஒரு காரணத்தை கொடுப்பாள் என்பதால் நாங்கள் இந்த உறுப்பு தானம் கொடுக்க சம்மதித்தோம்” என்று அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.