நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கூனம்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 60 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு முத்துசாமி மறுநாள் காலை அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் 2 ஆடுகள் நாய் கடித்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை உதவி மருத்துவர் இளமுருகு தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.