இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பனங்குடி சமத்துவபுரம் அல்லி வீதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது ஸ்கூட்டரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மனோகரன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக குமார் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.