தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் திமுக சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி பம்பரமாய் சுழன்று தேர்தல் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது சொந்த தொகுதியான கரூரை காட்டிலும் செந்தில்பாலாஜி கோவை தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். கோவையைப் பொருத்தவரை அதிமுக மற்றும் பாஜகவிற்கு பலம்வாய்ந்த தொகுதி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்னிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் கோவையில் திமுக எளிதாக வென்றுவிடலாம் என செந்தில் பாலாஜி கருதுவதாக பேசப்படுகிறது.
இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி வார்டு வாரியாக சென்று இரவு பகல் பாராமல் தேர்தல் வெற்றிக்கு உழைத்து வருவதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி இரவு இரண்டு மணிக்கு கூட தொண்டர்களுக்கு போன் செய்து தேர்தல் நிலவரம் குறித்து கேட்பாராம். இதனால் தொண்டர்கள் பதறிப்போய் போனை எடுத்து பேசுவார்களாம். இதனால் கோவையில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக உள்ள அதிமுகவின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. கோவையை பொருத்தவரை பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அதிக அளவில் உள்ளனர். இதனால் பாஜகவிற்கு கணிசமான அளவில் ஓட்டு விழும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.