இரவு நேரம் வீட்டிலிருந்து படுகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அந்த வீட்டில் இருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரவு நேரம் சுமார் 8.30 மணிக்கு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்த தம்பதி உடனடியாக அலறல் கேட்ட திசை நோக்கி சென்றனர். அங்கு இருந்த வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணொருவர் அமர்ந்திருப்பதையும் அவரின் அருகே ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
இதனை தொடர்ந்து அந்த தம்பதி காவல்துறையினருக்கும் மருத்துவ உதவி குழுவினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக அந்த வீட்டில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியை கைது செய்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் வேறு ஒரு பகுதியில் வசித்து வருவதாகவும் தாக்கப்பட்ட நபர் மட்டுமே தனியாக அந்த வீட்டில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் எந்தப் பொருளினால் அவர் தாக்கப் பட்டார் என்பதும் என்ன காரணத்திற்காக தாக்கப் பட்டார் என்பதும் தீவிர விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.