திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தமிழக அரசு சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து வியாபாரிகள் கஞ்சித்தொட்டியை திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருவதால் சுற்றுலா தலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதன்படி கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த போராட்டத்தின் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சவாரி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் பின் அவர்கள் அப்பகுதியில் கஞ்சித்தொட்டியை திடீரென திறந்து வைத்து சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.