விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் படிப்பு முடிந்தவுடன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளார். தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வேர்கடலையை பயிரிட்டுள்ள அருண்பாண்டியன் அதில் ஊடுபயிராக பாரம்பரிய நாட்டு துவரையை பயிரிட்டுள்ளார்.
மீதமுள்ள 3 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, உளுந்து போன்றவற்றை பயிரிட்டுள்ளார். ரசாயன உரங்கள், ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்த்து விட்டு முழுவதுமாக இயற்கை முறையில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்ட பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளன. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறிவுரையின் வழியில் இயற்கை விவசாயத்தில் சாதித்து சுற்றுவட்டார விவசாயிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அருண்பாண்டியன்.
பயிரிடுவதற்கு முன்பே விளை நிலத்தை நேர்த்தியாக உழுது அதில் இலை, தழைகள் மற்றும் மாட்டு சாணம் போன்றவற்றை சேர்த்து உரிய பக்குவத்திற்கு உருமாற்றியுள்ளார். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் மட்டுமே மூலதனமாக பயன்படுத்தி வருகிறார். வேர்கடலை மற்றும் துவரை ஒரே சமயத்தில் ஊடு பயிர் செய்யப்படுவதால் நல்ல மகசூல் கிடைப்பதாகவும் அருண்பாண்டியன் கூறுகிறார். இயற்கை விவசாயத்தில் முதலில் பல சறுக்கல்களை கண்ட அருண்பாண்டியன் அதிலுள்ள நெளிவு சுளிவுகளை கண்டறிந்து தற்போது நிமிர்ந்து நிற்கிறார்.
தான் செய்த தவறுகளை பிறர் செய்து விடக்கூடாது என்பதற்காக இயற்கை விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு சுற்றுவட்டார விவசாயிகளுக்கு அறிவுரை கூறி வரும் அருண்பாண்டியன் தன்னை தொடர்பு கொண்டு யார் வேண்டுமானாலும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார். ஒரு சில விவசாயிகளை போன்று அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களையும், பூச்சி மருந்துகளையும் உபயோகித்து லாபம் ஈட்டி வரும் இளம் இயற்கை விவசாயி உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.