யானை தாக்கியதால் இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பவானி எஸ்டேட் பகுதிக்குள் ஒற்றையானை நுழைந்தது. இந்த யானை தேயிலை தோட்ட தொழிலாளியான முருகன்(40) என்பவரது வீட்டிற்கு பின்புறம் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக முருகன் வீட்டிற்கு பின்புறம் சென்றுள்ளார். அப்போது காட்டு யானை முருகனை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து உதவி பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் சசிகுமார் ஆகியோர் முருகனின் மனைவி ஜானகியை நேரில் சந்தித்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். மேலும் காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் அப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.