Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு வாட்சா?…. சோதனையில் சிக்கிய நபர்…. ஏர்போர்ட்டில் பரபரப்பு…..!!!!!

துபாயிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் விலையுயர்ந்த பொருட்கள் கடத்திவரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாயிலிருந்து இன்று டெல்லி வந்த விமானம் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒரு பயணியிடம் இருந்து விலையுயர்ந்த வாட்ச்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியின் பையை சோதனை மேற்கொண்டபோது, ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா உட்பட விலையுயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றில் ஜேக்கப் அண்ட்கோ என்ற வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

அந்த ஒற்றை வாட்சின் மதிப்பானது 27 கோடியே 9 லட்ச ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதுமட்டுமின்றி வாட்ச்களுடன் சேர்த்து தங்கம், வைரம் பதிக்கப்பட்ட கைசெயின் மற்றும் ஐபோன் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பலகோடி ரூபாய் என்றும் அது 60 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததற்கு சமம் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதன்பின் துபாயிலிருந்து விலையுயர்ந்த பொருட்களை கடத்திவந்த பயணியை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

பின் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்நபரும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல கிளைகள் அமைத்து வாட்ச்கடை நடத்தி வருவது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட 7 வாட்ச்களையும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபலமான நபருக்கு விற்பனை செய்ய கொண்டுவந்ததாகவும், டெல்லியிலுள்ள 5 நட்சத்திர விடுதியில் வைத்து வாட்ச்களை அந்த நபரிடம் கொடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த பிரபல நபர் யார்..? அவரது பெயர் என்ன..? என்று கைதான நபர் இதுவரையிலும் கூறவில்லை என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதே நேரம் துபாயிலிருந்து விலை உயர்ந்த வாட்ச்களை கடத்திவந்த நபரின் பெயரையும் அதிகாரிகள் இதுவரையிலும் வெளியிடவில்லை.

Categories

Tech |