தமிழகத்தின் நிலையை விளக்கும் புதிய கார்ட்டூன் மூலம் துக்ளக் பத்திரிகை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கிடைத்த பலனாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த 29ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பொழுது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் துக்ளக் இதழில் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பல்வேறு கார்ட்டூன்கள் வரைந்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே மதிமுக கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்பிறகு துக்ளக் இதழை கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.