அதிமுக கட்சியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தஞ்சாவூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இபிஎஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றார். எடப்பாடி யார் காலில் விழுந்தாவது வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஓ பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவருடைய அனுமதியின்றி இபிஎஸ் கட்சி அலுவலகத்திற்குள் சென்றது தவறு. அதிமுக கட்சி அலுவலகம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எங்களைக் கட்சி அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என யாரும் கூறவில்லை. உயர் நீதிமன்றத்தில் கூட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றுதான் நீதிபதிகள் கூறினார்களே தவிர, எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என கூறவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி எந்த ஒரு இடத்திலும் இடைக்கால பொதுச் செயலாளர் என்று கூறவில்லை. அவர்தான் தானாகவே அந்த பதவியை பயன்படுத்திக் கொள்கிறார். கட்சி அலுவலகத்திற்குள் ஓ. பன்னீர்செல்வம் கழகப் பணிகளுக்காக செல்வார். நாங்களும் செல்வோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வந்தால் தான் கட்சி அலுவலகத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்பதெல்லாம் பொய்யான தகவல். ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என்று தான் சொல்கிறார். இதைத்தான் வைத்திலிங்கமும் சொல்கிறார். எடப்பாடி பழனிச்சாமியால் சசிகலா இல்லாமல் முதலமைச்சர் ஆகியிருக்க முடியுமா? யார் துரோகி என்பது ஊரறிந்த உண்மை.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் ஓ. பன்னீர்செல்வமும் யாரையும் அநாகரிகமாக பேசுவது கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி யாருமே இணைய கூடாது என்று நினைக்கிறார். வழக்கிலிருந்து தப்பிக்க யார் காலில் வேண்டுமானாலும் எடப்பாடி பழனிச்சாமி விழுவார். இதன் காரணமாகத்தான் கட்சியை கூட எடப்பாடி உடைக்க பார்க்கிறார். ஓ பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே நாட்டு மக்கள் ஆதரவு இருப்பதால், அவரை முதல்வராக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். அம்மா ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக கை காட்டினார். எனவே ஓ. பன்னீர்செல்வம் தான் முதலமைச்சராக இருக்க முடியும். எடப்பாடி பழனிச்சாமி தனி மனிதனாக தவிக்க விடப்படுவார் என்று கூறினார்.