வரலட்சுமியை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் வழிபாடு செய்யலாம். நாடு முழுவதும் இன்று வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட உள்ளது. மகாலட்சுமியை வணங்குவதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்கள் கூறிய இறைநம்பிக்கை. இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் நம் வாழ்க்கையில் அனைத்து வகை செல்வங்களையும், நம்மால் பெற முடியும். குறிப்பாக பெண்கள் வீட்டினை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து விரதம் இருந்து அம்மனுக்கு பிடித்த பாடல்களை பாடி அம்மனுக்கு வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
பூஜையின் முதல் நாள் தென் கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து, கோலமிட்டு பூஜைக்கு தேவையான பொருள்களை வைத்து அன்று இரவு முதலே வழிபாடு செய்ய வேண்டும். பூஜை அன்று அம்மனுக்கு பல வகையான பிரசாதங்களை படையலிட்டு சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, ரவிக்கைத்துணி, இனிப்பு, பழம் ஆகியவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும். பிறகு அனைவரும் ஒன்றுகூடி வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதில் ஆண்களும் மகாலட்சுமியை வழிபாடு செய்யலாம். அப்படி செய்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.
வீட்டிலேயே செய்யலாம் வரலட்சுமி பூஜை:
பதினாறு வகை செல்வத்தையும் வழங்கக்கூடிய லட்சுமிதேவியை நினைத்து ஆடி பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதமாகும்
வீடு அல்லது அலுவலகத்தில் தென் கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்பி, அங்கு அம்மன் சிலை வைக்க வேண்டும். சிலை இல்லாத பட்சத்தில் சந்தனத்தால் அம்மன் முகம் எழுப்ப வேண்டும். பின் சிலை முன் ஒரு வாழையிலை போட்டு, ஒரு படி பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்கள் வைத்து, சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிரப்பி மாவிலையுடன் தேங்காயை, அரிசின் நடுவில் வைக்க வேண்டும்.
பின்ஆரத்தி தட்டு வைத்து சுவாமியை பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜைக்கு பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம். பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றை படிக்கலாம். வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்க வேண்டும். நைய்வேத்தியமாக கொழுக்கட்டை படைக்கலாம்.