தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை அரசு அறிவித்து ஜூலை 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள்,அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அரசு அனுமதி அளித்துள்ளது