நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் சென்ற 2 நாட்களுக்கு முன்பு மாமன்ற கூட்டத்தை நடத்தினர். தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடந்தாலும் ஏராளமான மேயர்கள் இப்பதவிக்கு புதிது என்பதால் மன்ற கூட்டத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பது தொடர்பாக அவர்களுக்கு தயக்கம் நிலவியது. இதேபோன்று நகராட்சி மன்ற கூட்டங்களிலும் பல்வேறு தலைவர்களுக்கு கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
இச்சூழலில் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கு நிர்வாக பயிற்சி அளிக்க அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது. அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதில் சென்னை, தாம்பரம், ஆவடி உட்பட 21மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், 190 நகராட்சி தலைவர்கள், 190 நகராட்சி துணை தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் இன்று மாலை வேளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். அப்போது மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் குறித்து பல ஆலோசனை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.