வங்கியில் வீட்டு கடன் வாங்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் அந்த வங்கி நமக்கு கடன் தருவதற்கான தகுதி இருக்கிறதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். இதை அனைத்தையும் தாண்டி கடன் கிடைக்கும் என்று தெரிந்துவிட்டால் ஆவணங்கள் மற்றும் செயல்முறை என பேப்பர் வேலைகள் மிக அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் அனைவருக்கும் வீடுகள் என்ற இனத்திற்காக வங்கிகள் வீட்டு கடன்களுக்கான பேப்பர் வேலைகளை குறைக்க வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார இணை அமைச்சர் கௌசர் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.
ஹவுசிங் பைனான்ஸ் தொடர்பாக நடைபெற்ற தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இவர், வங்கிகளும், பில்டர் நிறுவனங்களும், நிதித்துறை சார்ந்தவர்களும் ஒத்துழைத்து நாட்டில் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 36 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கி கிளைகள் அனைத்தும் எளிதாக கடன் பெற முடிந்தால் அனைவருக்கும் வீடு கிடைப்பதை எளிதாகிவிடும். எனவே அனைத்து வங்கிகளும் கடன் பெறுவதை எளிதாக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.