ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் விதிமுறைகள் மாற்றப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அளவில் பிரபலமாக திகழும் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். இவர் சுகாதாரத் துறை செயலாளராக இருந்து தற்போது கூட்டுறவுத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளார். மக்களுடன் நேரடித் தொடர்புடைய இந்த துறைக்கு ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டது பலரும் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள், நியாயவிலை கடைகள் ஆகியவற்றில் தொடர் ஆய்வு செய்து வருகிறார்.
ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் விதிமுறைகள் மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள விதிமுறைகள் மாற்றப்படும். கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்தல் நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் தமிழக முதலமைச்சர் அரசு கடத்தலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.