கொரோனா பரவலை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் லட்சக்கணக்கானோர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் அதிகமாக இருப்பதால் , மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வது தடை செய்யப்படும் என்றும், குறிப்பாக ரேஷன் கடைகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைப் போலவே பொது இடங்கள் அனைத்திற்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி தடுப்பூசி போடாதவர்கள் சென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இனி தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவது கடினம்.அதனால் உடனடியாக விரைந்து சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.