உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடற்பயிற்சியை போல யோகாவும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பெரும்பாலானோர் வீடுகளிலேயே யோகாசனங்களை செய்து வருகின்றனர். தினமும் யோகா செய்வதால் உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு உபகரணங்கள் தேவைப்படும். ஆனால் யோகா செய்வதற்கு எந்த ஒரு உபகரணமும் தேவை இல்லை. யோகா ஆசனங்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுலபமாக செய்யலாம். வீட்டில் இருந்துகொண்டே எளிதில் யோகா ஆசனங்களை நீங்கள் செய்ய முடியும். இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. அப்படி யோகாசனம் செய்யும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய 11 விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். அதாவது யோகா செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.
யோகா செய்யும் போது செய்யக்கூடாதவை;
- யோகா செய்யும் போது அதிகமாக உழைக்கக் கூடாது. கடினமான யோகா ஆசனங்களை தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. சில எளிமையான யோகா ஆசனங்களை செய்வதற்கு முயற்சிக்கலாம்.உடல் மற்றும் தினசரி பலத்தைப் பொறுத்தே யோகா ஆசனங்களை நீங்கள் செய்து வரலாம்.
- குறிப்பாக அதிக வெப்பம், அதிக குளிர் அல்லது அதிக ஈரப்பதம் இருக்கும் நிலைகளில் யோக ஆசனங்களை செய்ய கூடாது.
- யோகா பயிற்சியின் போது சுவாசம் மிக முக்கியமானது. இயற்கைக்கு மாறாக மூச்சு விடக்கூடாது. சாதாரணமாக மூச்சு விட முயற்சி செய்யுங்கள்.
- சாப்பிட்ட உடனே யோகா செய்யக்கூடாது. சாப்பிட்ட பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து உணவு ஜீரணம் ஆன பிறகு தான் யோகா பயிற்சி செய்ய வேண்டும்.
- உங்களுக்கு சோர்வாக இருந்தால் யோகா பயிற்சியை செய்ய வேண்டாம். உங்களது உடம்பை வருத்தி யோகா செய்யக்கூடாது.
- யோகா பயிற்சியாளரின் உதவியுடன் யோகாவை மேற்கொள்ளுங்கள். தனியாக சில யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் வெறும் வாசிப்பின் அடிப்படையில் யோகா செய்வது தசை இழுத்தல் அல்லது அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.
- மேலும் யோகா செய்யும் போது இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. அப்படி அணிந்தால் விலா எலும்பு மற்றும் நுரையீரலின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். இது முழுமையற்ற சுவாசத்தை உங்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.
- யோகா செய்து முடித்த பிறகு உடனே குளிக்கக் கூடாது. உடம்பில் இருந்து வியர்வை வெளியேற்றம் இருந்தால் உலர்ந்த பிறகு குளிக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் சில யோகா செய்யக்கூடாது . பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் தலை கீழ் யோக முறையை செய்ய வேண்டாம். மாதவிடாய் காலத்தில் எளிய யோகா பயிற்சிகளை செய்வது நல்லது.
- இறுதியாக யோகா செய்யும் போது இடையில் அதிக தண்ணீரை குடிக்கக் கூடாது. அதிகப்படியான தண்ணீர் அருந்துவது உங்களை வயிறு நிரம்பிய உணர்வை தூண்டி கனமாக உணரச் செய்யும். எனவே தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.