தமிழகத்தில் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாக தண்டிக்க கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அப்போதிலிருந்து பள்ளி வளாகத்தில் பல்வேறு தவறுகளை செய்யும் போக்கு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவ்வகையில் சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியருடன் மோதல் மற்றும் சக மாணவியிடம் பாலியல் தொல்லை தரும் விதத்தில் நடந்து கொள்வது,வகுப்பறையில் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மற்றும் சிகரெட் புகைப்பது என மாணவர்கள் ஒழுக்கம் கேடான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாணவர்களுக்கு ஈடாக பள்ளி மாணவிகளும் வகுப்பறைக்கு உள்ளேயே மது குடித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பள்ளி மாணவ மாணவிகள் இது போன்ற அடாவடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பள்ளி கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பெஞ்ச், டேபிள்,வகுப்பறை ஜன்னல் மற்றும் ஆய்வக கருவிகள் உள்ளிட்ட பள்ளியின் சொத்துக்களுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரே முழு பொறுப்பு எனவும் பள்ளியில் ஒழுக்கம் கேடாக,தவறிழைக்கும் போக்கில் நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஆசிரியர் தக்க ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆசிரியர்களின் ஆலோசனையை மீறி தவறு செய்யும் மாணவர்களின் டிசியை கொடுத்து அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளியில் மாற்ற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அடங்கிய சுற்றறிக்கை பள்ளி கல்வி மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை விரைவில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.