ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், இந்தியாவின் பல மாநிலங்களிலும் 100% கண் கருவிழி பதிவு மூலமாக ரேஷன் பொருட்கள் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சில கடைகளில் சோதனை முறையில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.