அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் தாக்கப்பட்டது ஒவ்வொரு தொண்டருக்கும் ஏற்பட்ட அவமானம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வேட்புமனு வாங்க வந்த ஓமபொடி பிரசாந்த், ராஜேஷ் உள்ளிட்ட சில அதிமுக தொண்டர்களை நிர்வாகிகள் அடித்து துரத்திய தகவல் வெளியானது. இந்த சூழலில் அதிமுக தொண்டர்கள் தாக்கப்படுவது வெட்கப்படவேண்டிய வகையில் இருப்பதாகவும், இனிமேல் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: “அதிமுக தொண்டர்களுக்கு ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான இயக்கமாகவும் தற்போது வரை செயல்பட்டு வந்துள்ளது.
நாட்டில் அனைத்து கட்சிகளும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு உயர்ந்த கட்சி நம் கட்சி. ஆனால் இன்றைய நிகழ்வு வெட்கப்படவேண்டிய நிகழ்வாக உள்ளது. எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதித்து அவர்கள் நலனில் அக்கறை காட்டும் போதுதான் அதை பார்க்கும் மற்றவர்களுக்கு இயக்கத்தின் மீது நம்பிக்கை வரும். தொண்டர்கள் அடிதடி நடத்துவது சரியானது கிடையாது. ஓமபொடி பிரசாந்த் புரட்சித் தலைவரின் அன்பைப் பெற்றவர். தலைவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் தான் தனக்கு திருமணம் என்று மேடையில் வெகுநேரம் காத்திருந்தவர்.
இன்று தான் தொண்டர்களின் நிலையை இருபெரும் தலைவர்களும் கண்ணீரோடு தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது இயக்கத்தை சீரழித்து விடாதீர்கள். இனியும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகள் மீது விழும் அடி ஆகும். என் மீது விழும் அடி ஆகும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொண்டு நம் தலைவர் காட்டிய வழியில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.