சமீபகாலமாக ஆன்லைன் கடன் செயலிகள் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. அதில் சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன. அதிலும் பெரிய பங்கை கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அதிக வட்டியும் விதிக்கப்படுகிறது. ஒருவேளை கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் கடன் வாங்கியோரை துன்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.
எனவே இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதனைப்போலவே ஆன்லைன் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் கடன் செயலிகளை ஒழுங்குபடுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாடு முழுவதும் டிஜிட்டல் கடன் செயலிகளில் பெரும்பாலானவை அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத சட்டவிரோதமானவை.
இதில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு விரிவான ஒழுங்குமுறை அமைப்பை விரைவில் கொண்டு வருவோம். மேலும் ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்துவதற்கு முன்பு அவை ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டவையா என்பதை பொதுமக்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்த செயலிகள் ஏதாவது தவறு செய்தால் கட்டாயம் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் இது போன்ற செயல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.