தமிழகத்தில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியமில்லை என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள், இளம் வயதினர், இணை நோய் பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தால் அவர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு யாருக்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யவேண்டும், யாரையெல்லாம் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்பது பற்றி புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளவர்களுக்கு அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கோரோணா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் அவர்களுக்கும் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்து அறிகுறிகள் எதுவும் இல்லாதவருக்கு பரிசோதனை தேவையில்லை. இணை நோய் இல்லாதவர்கள், இளம் வயதினர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை. மேலும் வீட்டு தனிமையில் இருக்கின்ற தொற்று பாதிக்கப்பட்டவர்களை பொருத்தவரை அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்ட 7 நாட்களுக்குப் பிறகு அல்லது சளி மாதிரிகள் கொடுத்து 7 நாட்கள் கடந்த நிலையிலும் சம்பந்தப்பட்டவர்களை வீட்டு தனிமையை நிறைவு செய்துகொள்ள அறிவுறுத்தலாம். இதையடுத்து வீட்டு தனிமையை முடித்த பின்னர் மறுபடியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை. மேலும் மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை அவர்களது உடல் நிலையை பொருத்து வீட்டுக்கு அனுப்பலாம் என்று அதில் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.