ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கடந்த ஜூன் 6ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்த நிலையில் கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டு 4.90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கி கடன் பெற்று EMI செலுத்தி வருவோர் இனிவரும் நாட்களில் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் யுபிஐ பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டுகளை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தவிர கூட்டுறவு வங்கிகளும் சில முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதாவது, நகர்ப்புற மற்றும் ஊரக கூட்டுறவு வங்கிகளில் தனிநபர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதற்கான வரம்பு தற்போது 100 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக கூட்டுறவு வங்கிகள் வீடமைப்பு திட்டங்களுக்கு வழங்க தங்கள் மொத்த சொத்துக்களிலிருந்து 5 சதவீதம் தொகையை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே நேரடியாக வங்கி சேவைகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.