சென்னையில் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய் விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் விற்பனை செய்யக்கூடிய மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் பல வெளி மாநிலங்களில் இருந்தும் லாரிகளில் காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், திடீரென வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்துள்ளார். முதல் கட்டமாக இன்று சென்னையிலும், நாளை தமிழகம் முழுவதிலும் இந்த விற்பனை துவங்கப்பட உள்ளது.