திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தடுக்கும் அடிப்படையில் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாதந்தோறும் ஆன்லைன் வாயிலாக ரூபாய்.300 தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி பிரமோற்சவவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம், முதியோர்,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் திருப்பதியில் பக்தர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இந்நிலையில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் அதிகளவு இனிப்பு இருப்பதாக பக்தர் ஒருவர் தேவஸ்தான அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். திருப்பதி என்றாலே அனைவரது ஞாபகத்திற்கும் வருவது அங்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டுதான். பெரும்பாலும் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் லட்டுகளை வாங்கிசெல்வர். இந்த சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகள் லட்டை உண்ண முடிவதில்லை என பக்தர் கூறியுள்ளார்.
ஆகவே சர்க்கரை நோயாளிகளும் லட்டு பிரசாதத்தை உண்ணும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய தேவஸ்தான அதிகாரி தர்மேந்திர ரெட்டி சர்க்கரை நோயாளிகளுக்காக தனியாக லட்டு தயாரித்து வழங்க ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.