இனி பொறுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, தவறு செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: ” செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார். நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். 25 வருடம் கழித்தும் 5 எம்.எல்.ஏ.க்கள்தான் வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு காரணமும் நீங்கள்தான்.
நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரித்து மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலம் பா.ம.க.வின் காலம். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தால் 2026 தேர்தலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. ஆட்சி அமைவது உறுதி. இனி கட்சியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும். தலைவர், கெளரவ தலைவரை தவிர, மற்ற பொறுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, தவறு செய்தாலே சம்பந்தப்பட்டவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.