சென்னையில் உள்ள கடல்களிலேயே நீண்ட பெரிய கடற்கரை என்றால் அது மெரினா கடற்கரை. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை இது. எழில்கொஞ்சும் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு மணலில் நடந்து கடலில் கால் நனைத்து வந்தால் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இது பெரும் கனவாக இருக்கிறது. பெரும்பாலானவர்களால் மெரினா கடற்கரையின் நீண்ட மணல் பரப்பில் நடந்து செல்ல முடியாது. மணற்பரப்பில் நடந்து செல்வது கடினம் என்பதால் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் கால் நனைப்பது என்பது எட்டாத கனியாக இருந்து வருகின்றது.
பண்டிகை காலங்களில் மட்டும் தற்காலிக நடைபாதை அமைப்பதை சென்னை மாநகராட்சி வழக்கமாக வைத்துள்ளது. அதாவது கடற்கரை சாலையில் இருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்த பாதை வழியாக மூன்று சக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்றுவர முடியும். ஆனால் இது தற்காலிக பாதைதான். குறிப்பிட்ட காலம் வரைக்கும் இதைப் போட்டு வைத்திருப்பார்கள். அதன்படி, இந்த தற்காலிக நடைபாதையை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.