தமிழகத்தில் மோசடியாக பதிவு செய்யப்படும் பத்திரங்களை மாவட்ட பதிவாளரே ரத்து செய்வதற்கான சட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஒரு நபருக்கு தெரியாமல் அவரது சொத்தை மற்றொரு நபர் வேறு பெயர்களில் பதிவு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் பாதிக்கப்பட்ட நபர் காவல் துறையில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
இதனிடையே காவல்துறை விசாரணையில் மோசடி நடந்தது உறுதியாகும் சமயத்தில் அந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வந்தால் பத்திரத்தை ரத்து செய்வோம் என்று சார்பதிவாளர்கள் கூறுகிறார்கள்.இதனால் பலரும் அவதிப்படும் நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா கடந்த வருடம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு சமீபத்தில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த நிலையில் மோசடி பத்திரங்களை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் வழிமுறைகளுக்காக பதிவு சட்டத்தில் ஐந்து பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளதாகவும் பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த புதிய விதிகளின்படி பாதிக்கப்பட்டவர்கள் முறையான நிவாரணம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் மோசடி பத்திரங்களை பதிவு செய்யும் சார் பதிவாளர்கள் அது தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டு சிறைச் செல்லவும் இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.