லண்டனில் கஞ்சா கலந்த மிட்டாய் சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் சுட்டோன் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் தெரியாமல் கஞ்சா கலந்து மிட்டாய்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் கஞ்சா கலந்த பொருள்களை சாப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பார்ப்பதற்கு சாதாரண மிட்டாய் போன்ற இருக்கும் கஞ்சா கலந்த மிட்டாய்களை சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அத்தகவலின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் “சுட்டோனில் உள்ள பள்ளிகளில் இந்த மிட்டாய்களை சாப்பிட்ட குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பார்ப்பதற்கு சாதாரண மிட்டாய் போல் இருக்கும் இந்த மிட்டாய்களை யாராவது விற்பனை செய்வதை பார்த்தாலோ அல்லது குழந்தைகள் யாராவது சாப்பிடுவதைப் பார்த்தாலோ உடனே தங்களுக்கு தகவல் தெரிவிக்கவும்” என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.