தமிழகத்தில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்டறிய அனைத்து காவல் நிலையத்திற்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்..
தமிழகத்தில் கொலை குற்றங்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை 3 நாட்கள் தொடர்ந்து ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ நடத்தினார்கள்.. இந்த அதிரடி ஆபரேஷனை தமிழக காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தியது.. சென்னையிலும் நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் குறிப்பாக 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கொலை சம்பந்தப்பட்ட 1,110 கத்திகள், 7 கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது..
இந்த நிலையில் தமிழகத்தில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று அனைத்து காவல் நிலையத்திற்கும், எஸ்பிக்கும் டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்கள் முன்னே கண்டறிந்து எழுதி வைக்கவேண்டும். அறிவாள் வாங்குபவரின் பெயர், முகவரி தொலைபேசி எண் வாங்குவதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும். விவசாயம், வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி, ஆயுதம் வாங்கினால் அடையாளம் தெரியாதவர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.
தவறான நபர்களின் கைகளுக்கு ஆயுதங்கள் செல்வதை தடுக்க வேண்டும்.. அந்தந்த கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி பொருத்துவதில் சிரமம் இருந்தால் காவல்துறையின் உதவியை நாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகள் குறித்த தகவல்களை கடைகள் தெரிவித்தால் தகுந்த வெகுமதி கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை விற்கும் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் அனைவரையும் அழைத்து அந்தந்த மாவட்ட காவல்துறையினர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். அந்த ஆலோசனைக்குப் பிறகு இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.