தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது 8 ஆம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ் (டிசி) இல்லாமல் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கலாம். மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். பலர் அரசு பள்ளிக்கு மாறிவரும் நிலையில் கல்வி கட்டணம் செலுத்தினால் மட்டுமே டிசி தரப்படும் என தனியார் நிர்வாகம் கூறுவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.