பயணிகளுக்கு இடையூறு ஏதும் இன்றி பயணசீட்டு வழங்குவதற்காக பயணசீட்டு சாதன மேலாண்மை தொழில்நுட்பத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: இனி தொழில்நுட்பத்தின் மூலம் கணினி முன்பதிவு பயணச் சீட்டு மற்றும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் போது கணினி நெட்வொர்க்கில் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக இணைய வழியாக சரி செய்ய முடியும். இதன் மூலம் பயணிகளுக்கு எந்த இடையூறுமின்றி பயண சீட்டு வழங்க முடியும்.
இது போன்று ஏதாவது தொழில் நுட்ப பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து கைகளால் பதிவு செய்து, பின்னர் தொடர்புடைய அலுவலகத்திற்கு தெரிவித்து பின்னர் சரிசெய்யப்படும். இதனால் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டுள்ளதால் ரயில்வே நிர்வாகத்திற்கு செலவு ஏதும் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.