பிரிட்டன் பிரதமர், தங்களுக்கும் பிரான்சிற்கு இடையே மீன்பிடிப்பதில் பிரச்சனை அதிகரித்து வருவதால் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதற்கு பின்பு தங்களது கடல் பகுதிகளில் பிற நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயல்கிறது. இதனால் தங்கள் கடல்பகுதியில் மீன் பிடிக்க, பிரஞ்சு மீன்பிடிப் படகுகள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் பிரிட்டன் விதித்திருக்கிறது. ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை, பிரெக்சிட்டிற்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பின்பற்றுவோம் என்று தெரிவித்துவிட்டது. இதனிடையே பிரான்சிலிருந்து தான், பிரிட்டனின் ஜெர்ஸி தீவிற்கு கேபிள்கள் வழியாக மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது.
இந்த மீன்பிடி பிரச்சனையால் பிரான்ஸ் அரசு, பிரிட்டனை பழிவாங்க மின்சார கேபிள்களை துண்டித்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் பிரிட்டன் உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, ஜெர்சி தீவில் இருக்கும் ஒரு துறைமுகத்தை பிரான்சின் 100 மீன்பிடி படகுகள் இன்று காலையில் சுற்றிவளைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இனியும் பொறுக்க முடியாது என்று அதிரடியில் இறங்கிவிட்டார். அதன்படி பிரச்சனைகள் உருவாவதற்கு முன், முன்னெச்சரிக்கையாக நேற்றிரவில், பீரங்கி மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளோடு HMS Severn மற்றும் HMS Tamar என்ற 2 பிரிட்டன் போர் கப்பல்கள், ஜெர்சி தீவிற்கு அனுப்பப்பட்டு, தங்களது கடல் பரப்பில் சோதனையில் ஈடுபட்டுள்ளது.