திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல்லில் சிறப்புவாய்ந்த அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வருடம் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதன்படி சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு ரிஷப ஹோமம் காலை 5 மணி அளவில் நடைபெற்றது. அதன் பிறகு கொடிமரம் மற்றும் நந்திக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. நந்தி வரையப்பட்ட வெண்கொடி காலை 6 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
அதன்பின் தீபாராதனைகளும் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சி காண பக்தர்களுக்கு கொரோனா காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து அம்மன்-பத்மகிரீஸ்வரருக்கு இரவு 7 மணி அளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் பிரகாரத்தில் சாமி, பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு நடைபெற்றது. இத்திருவிழாவில் பட்டாச்சாரியார்கள் மூலம் வருகிற 24-ஆம் தேதி திருகல்யாணம் நடைபெற உள்ளது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரியுடன் 26-ஆம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.