சித்திரை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கின்ற கிராமங்களில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முயல் வேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம், சிறுவாச்சூர், ஆலம்பாடி, குரும்பலூர், திருநகர் ஆகிய பகுதிகளில் சித்திரை மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முயல் வேட்டை திருவிழா நடந்தது.
இந்த விழாவையொட்டி நேற்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள உள்ளவர்கள் காட்டிற்குச் சென்று புதர்களில் பதுங்கியிருந்த முயல்களை பிடித்து வேட்டையாடினர். அதன்பின் மாலையில் வேட்டையாடி கிடைத்த முயல்களுடன் ஊருக்குள் திரும்பி வந்துள்ளனர்.
இதனையடுத்து பிடித்த முயல்களை குச்சிகளில் தோரணமாக கட்டி தொங்க விடப்பட்டு மேளதாளங்களுடன் ஆடிபாடி வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அதன்பின் அதை கோவிலுக்கு கொண்டு சென்று படைத்து கறியாக பங்கு வைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்தனர். அதன்பின் அவர்கள் வீட்டிலேயே சமைத்து அம்மனுக்குப் படைத்து பூஜை செய்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.