சாலையில் கிடந்த பணப்பையை பத்திரமாக ஒப்படைத்த மாணவிகளை சப்-இன்ஸ்பெக்டர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் வழியாக 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளான வாணி, பவித்ரா, சங்கரேஸ்வரி ஆகியோர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த தெருவில் கிடந்த ஒரு பையை எடுத்து பார்த்த போது அதில் 10 ஆயிரம் ரூபாய் இருந்ததை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை அவ்வழியாக சென்ற யாரோ தவறவிட்டிருக்கலாம் என நினைத்து அதனை பத்திரமாக எடுத்து சென்றனர். இதனை அடுத்து மறுநாள் காலை பள்ளிக்கு சென்ற மாணவிகள் ஆசிரியர்களான திருச்செல்வன், சுரேந்திர பாபு ஆகியோரிடம் பணத்தை கொடுத்து நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு ஆசிரியர்கள் அந்த பணத்தை செம்பியம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதியிடம் கொடுத்து உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பணத்தை நேர்மையாக ஒப்படைத்த பவித்ரா, சங்கரேஸ்வரி, வாணி ஆகியோரை இன்ஸ்பெக்டர் கோமதி நேரில் சந்தித்து பாராட்டி சன்மானமாக 500 ரூபாய் வழங்கியுள்ளார். அந்த மாணவிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.