அரசு தேர்வுத்துறை அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை அரசு தேர்வுத்துறை ஆரம்பிக்க உள்ளது. இதைப்பற்றி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட இருக்கிற பொதுத்தேர்வுக்கு தேர்வு மையங்கள் அமையவுள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைக்க வேண்டும்.
மேலும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு 10 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தால் அந்தப் பகுதியில் தேர்வு மையம் அமைக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கூடாது. நீதிமன்ற உத்தரவு மற்றும் தொடர் அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளை தனியாக பட்டியலிட வேண்டும். 1 வருடம் மட்டும் தேர்வு மையம் அமைத்த பள்ளிகளில் மீண்டும் தேர்வு மையம் வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை உரியமுறையில் பரிந்துரைக்க வேண்டும். புதிதாக தேர்வு மையங்கள் தேவைப்படும் பள்ளிகளை முழுமையாக ஆய்வுகள் நடத்தி தேவையான கட்டமைப்புகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.