மதுரை மாநகராட்சியிலிருந்து வழங்கப்படும் குடிதண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றமும் வீசுவதால் அதை குடிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இந்த யுகத்தில் வாழும் மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக நீரும் விளங்குகிறது. இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் மாநகராட்சியிலிருந்து வீடுகளுக்கு குடிப்பதற்காக வினியோகம் செய்யப்படும் தண்ணீர் மஞ்சள் நிறத்திலும், சாக்கடை போன்றதொரு துர்நாற்றத்துடனும் இருந்துள்ளது. அதாவது வைகை அணையிலிருந்து குடிதண்ணீருக்காக நீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரித்து, அதனை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து பின்னர் வீடுகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.
இதற்கிடையே குடிதண்ணீர் இவ்வாறு மஞ்சள் நிறத்திலிருப்பதால் பொதுமக்கள் அதை குடிக்க தயங்கி கேன் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி பருகி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது, வைகையிலிருந்தே தண்ணீர் எடுக்கப்படும்போது லேசான மஞ்சள் நிறத்தில் தான் இருந்தது. இதனையடுத்து அதில் குளோரினை கலந்து சுத்தப்படுத்தபட்டுள்ளது. மேலும் நிறம் அவ்வாறு இருந்தாலும் தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.