இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை வேகம் எடுக்க தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என இந்த வரிசையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை எந்த தேதியில் உச்சம் பெற்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 21 ஆம் தேதி தேசிய அளவில் தினசரி பாதிப்பு நாடு முழுவதும் 3 லட்சத்து 47 ஆயிரத்து 245 எனவும், கொரோனா 2 ஆவது அலையின்போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 வரையில் இருந்தது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவே கொரோனா மூன்றாவது அலையின் உச்சகட்ட பாதிப்பு எனவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அகர்வால் கூறியுள்ளார். அதோடு கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் தொற்று பரவும் விகிதம் தற்போது கணிசமான அளவில் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.