ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இதனால் உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா சுமார் 1½ லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ரஷ்யா தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்துள்ளதாக கூறுகிறது.
மேலும் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷ்யா செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் 2 பிராந்தியங்களை தனிநாடுகளாக அங்கீகரித்து ரஷ்ய அதிபர் புதின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன் உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா கடந்த வாரம் தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோவை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜெனீவாவில் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் “ரஷ்யா இப்போது படையெடுப்பு தொடங்குவதை பார்க்கிறோம். இந்த நேரத்தில் அந்த சந்திப்பை முன் வைப்பதில் அர்த்தமில்லை என்றும் நான் எங்கள் கூட்டாளிகள் மற்றும் ஆட்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளேன். அனைவரும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்” என்று ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.