கோவை பாரதியாா்பல்கலையின் 37-வது பட்டமளிப்பு விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது “இந்தியை திணிக்ககூடாது என்றார். இந்தி பயின்றால் வேலை கிடைக்கும் எனக் கூறப்படுவதையும் கேள்வி எழுப்பிய அவர், அதை படித்தவர்கள் இங்கு பானி பூரி விற்பதாகவும் கூறி இருந்தார். இவ்வாறு கவர்னர் முன்னிலையில் அமைச்சர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திமொழிக்கு சிவசேனா அரசானது திடீரென்று தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறது. இதுபற்றி நேற்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறியிருப்பதாவது “எங்களுடைய கட்சி எப்போதும் இந்தியை மதிக்கிறது.
எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேசுவேன். ஏனென்றால் நான் பேசுவதை நாடு கேட்கவேண்டும். இந்தி நாட்டின் மொழி ஆகும். இந்தி தான் ஏற்றுக்கொள்ளகூடிய ஒரு மொழி ஆகும். நாடு முழுதும் அது பேசப்படுகிறது. இந்தி திரை உலக நாட்டிலும், உலக அளவிலும் மதிப்புமிக்கதாக இருக்கிறது. ஆகையால் எந்த மொழியும் அவமதிக்கப்பட கூடாது. அனைத்து மாநிலங்களிலும் ஒரேமொழி (இந்தி) இருக்க வேண்டும் என்ற சவாலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரேநாடு, ஒரே அரசியலமைப்பு, ஒரே சின்னம் போன்று ஒரே மொழியும் இருத்தல் வேண்டும்” என்று அவர் கூறினார். இதனிடையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்ற மாதம் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்று மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிவசேனா கட்சி “ஒரே நாடு, ஒரே மொழி” கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்று வட இந்தியர்கள் மும்பைக்கு வந்து மராத்தியர்களின் வேலை வாய்ப்புகளை பறித்துக்கொண்டதாக சிவசேனா ஒரு காலத்தில் குற்றம்சாட்டி வந்தது. எனினும் மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழ்நிலையில், மும்பையிலுள்ள கணிசமான வடஇந்திய வாக்குகளை குறிவைத்து சஞ்சய் ராவத் இந்தி மொழிக்கு ஆதரவாக பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது.