இந்திய ராணுவத்தை அவமரியாதை செய்ததாகவும், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். மேலும் அமீர்கான் மற்றும் இயக்குனர் அத்வைத் சந்தன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அமீர் கானுடன் கரீனா கபூர், நாக சைதன்யா, மோனா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மனவளர்ச்சி குன்றிய ஒருவருக்கு ராணுவத்தில் சேரவும், கார்கில் போரில் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்படுவதை படம் சித்தரிக்கிறது. கார்கில் போருக்கு பயிற்சி பெற்ற சிறந்த வீரர்கள் அனுப்பப்பட்டனர். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்திய ராணுவத்தின் மன உறுதியைக் குலைப்பதற்காகவும், அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டுமென்றே இந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டது என்று ஜிண்டால் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில், குறிப்பிட்ட ஒரு காட்சி இந்துக்கள் மத்தியில் உணர்வுகளைத் தூண்டிவிட்டதாக அந்தப் புகாரில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.