சமூகஊடகம் ஒன்றில் சந்தித்த மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம், ஒருவர் தன்னை ஒரு பிரித்தானிய தொழில் அதிபர் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் பழகத் தொடங்கிய இவர்கள் இருவரும் விரைவில் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் உங்கள் பிறந்த நாள் எப்போது, உங்களுக்கு பரிசுகள் அனுப்ப விரும்புகிறேன் என ஜேம்ஸ் பாண்ட் கூற, தனது பிறந்தநாள் மற்றும் முகவரியை அவருடன் அந்த இந்தியப்பெண் பகிர்ந்துகொண்டுள்ளார். இதையடுத்து தான் அப்பெண்ணின் இந்திய முகவரிக்கு சில தங்கநகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகள் அனுப்பி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
அதன்பின் அப்பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேஹா என்ற பெண், தான் ஒரு ரிசர்வ் வங்கி அதிகாரி எனவும் பிரித்தானியாவில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ள 25,500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பி அந்த தொகையை செலுத்தியிருக்கிறார் அந்த பெண். அதனை தொடர்ந்து மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட நேஹா என்ற பெண், அந்த பார்சலில் அமெரிக்க டாலர்கள் இருப்பதாகவும், அதனால் 26,000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் எனவும் கூறினார். அதையும் அப்பெண் செலுத்தியிருக்கிறார். மேலும் தீவிரவாத எதிர்ப்பு சான்றிதழ் பெற வேண்டும், வரிகள் செலுத்தவேண்டும் எனவும் கூறி கிட்டத்தட்ட 5.06 இலட்ச ரூபாய் வரை அந்த மும்பை பெண்ணிடம் பெற்றுக்கொண்டிருக்கிறார் நேஹா.
இதனிடையில் ஜேம்ஸ் பாண்டைத் தொடர்புகொண்ட அப்பெண், இதுபோன்று அதிகாரிகள் பணம் கட்டச் சொல்கிறார்கள் என்று கூறினார். அதற்கு அவரும் அது சரியானதுதான், பணம் செலுத்தி பார்சலைப் பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். இதனால் அதிகாரிகள் என தங்களை அறிமுகம் செய்துகொண்டவர்கள் பணம் கேட்டுக் கொண்டே இருக்க, அதற்குப் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டுவருவது அந்த மும்பை பெண்ணுக்கு புரிந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அப்பெண் காவல் நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளார். இந்த மோசடியின் பின்னணியில் நைஜீரிய கும்பல் ஒன்று இருக்கலாம் என காவல்துறையினர் கருதி, அதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.